Abstract:
அதிக பாதிப்பை ஏற்படுத்தும் இயற்கை அனர்த்தங்களில் மண்சரிவும் ஒன்றாகும்.
மண்சரிவினால் பாதிக்கப்பட்ட மக்கள் அதிக உடல், உள, சமுக தாக்கங்களுக்கு உள்ளாவதோடு
அவர்களின் வதிவிடங்களும் அழிக்கப்படுகின்றன. அவ் வகையில் இலங்கையில் 2014.10.29 அன்று
மீரியபெத்தை பிரதேசத்தில் இடம்பெற்ற மண்சரிவானது பல பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தியது.
காலப்போக்கில் பாதிக்கப்பட்ட மக்களுக்கான புதிய வீடமைப்புத் திட்டங்கள் 2016ம் ஆண்டு மக்களிடம்
கையளிக்கப்பட்டன. தற்காலத்தில் மக்களுக்கு தனித்தனி வீடுகள் வழங்கப்பட்ட போதிலும் அவை
பூரணத்துவமின்றி காணப்படுகின்றன. இவ்வாய்வின் நோக்கமானது இப் புதிய வீடமைப்புத்திட்டத்தில்
உள்ள பிரச்சினைகளை முன்வைத்தலும் அவற்றை தீர்ப்பதற்கான தீர்வுகளை வழங்குவதுமாகும்.
ஆய்வுக்குத் தேவையான தரவுகள் முதலாம் நிலைத்தரவு என்ற ரீதியில் வினாக்கொத்து, நேர்காணல்,
நேரடி அவதானிப்பு, குழுக் கலந்துரையாடல் என்ற அடிப்படையிலும், இரண்டாம் நிலைத்தரவு என்ற
ரீதியில் புதிய கொஸ்லந்தை வீடமைப்புத் திட்டம் பற்றிய பிரதேச செயலக புள்ளிவிபரவியல் அறிக்கை,
கிராம சேவகர் புள்ளிவிபரத் திரட்டு, குடிசன மதிப்பீட்டுத் திணைக்கள புள்ளிவிபரங்கள், பத்திரிகைகள்,
இணையத்தளங்கள் என்பனவற்றிலும் சேகரிக்கப்பட்டன. இதன்படி ஆய்வுப் பிரதேசத்தில்
இனங்காணப்பட்ட பிரச்சினைகளாக மின்சார வசதிகள் தகுந்த முறையில் செய்து கொடுக்கப்படாமை,
சிறந்த வடிகாலமைப்பு வசதிகள் இன்மை, வீடுகளின் கூரைகள் சரியான முறையில் பொருத்தப்படாமை,
போக்குவரத்து சார்ந்த பிரச்சினைகள், கல்வி நடவடிக்கைகள் சார்ந்த பிரச்சினைகள், பொருளாதார
ரீதியிலான சிக்கல்கள், அரச கட்டிடங்கள் மற்றும் வழிபாட்;டுத் தலங்கள் இல்லாமை, இடப்பற்றாக்குறை,
குடும்ப உறவுகளில் ஏற்பட்டுள்ள விரிசல் என்பன காணப்படுகின்றன. இறுதியாக மேற்கண்ட
பிரச்சினைகளுக்கான தீர்வுகளையும் முன்வைப்பதாக இவ்வாய்வு அமைந்துள்ளது.