Abstract:
தற்காலச் சமூகங்களின் சமூகக் கட்டமைப்பானது ““E-society” என
அழைக்கப்படுமளவு இணையத்துடனும், சமூக ஊடகங்களுடனும் பின்னிப்பிணைந்ததாக உள்ளது.
ஏனெனில் இன்றைய நவீன தொழில்நுட்ப சூழலில் மக்கள் வாழ்க்கை நடைமுறைகள் அனைத்தும் சமூக
ஊடகங்களை சார்ந்ததாகவே அமைந்துள்ளன. சமூக ஊடகங்கள் என்பது மக்கள் இயங்கலை (Online)
மூலம் ஒருவரோடு ஒருவர் இடைவினை கொள்வதற்கு பயன்படுத்தும் ஊடகங்களாகும். எனினும் இன்று
சமூக ஊடகங்களின் பாவனையானது வளா்ந்தவர்களால் மட்டுமன்றி சிறுவர்கள் என மதிக்கப்படும் 18
வயதிற்கு குறைந்த பாடசாலை மாணவர்களால் முறையற்ற விதத்தில் பயன்படுத்தப்படுவது
வருத்தத்திற்குரிய விடயமாகும். அந்தவகையில் ஆய்வுப் பிரதேசத்திலும் சமூக ஊடகங்கள் பாடசாலை
மாணவர்களாலும் அதிகமாகப் பயன்படுத்தப்படுவதை மையமாகக் கொண்ட வகையில் “தற்காலத்தில்
பாடசாலை மாணவர்களிடம் காணப்படும் சமூக ஊடகங்களின் பாவனையும், அவற்றின் விளைவுகளும்”
எனும் தலைப்பின் கீழாக கல்லடி பிரதேசத்தை மையமாகக் கொண்டதாகவே இந்த ஆய்வானது
மேற்கொள்ளப்பட்டது. இவ் ஆய்வில் வரையறைக்குட்பட்ட வகையில் தரம் 10, 11, 12 மாணவர்களின்
சமூக ஊடகங்களின் பாவனையே கருத்திற் கொள்ளப்படுகின்றது. சமூக ஊடகங்களை மாணவர்கள்
எதற்காக பயன்படுத்துகின்றனர், பயன்படுத்துவதன் முழுமையான நோக்கம் என்ன, சமூக ஊடகங்களை
பாவிப்பதால் ஏற்படும் நன்மைகள், தீமைகள் மற்றும் சமூக ஊடகங்களை பாவிக்கும் மாணவர்களின்
கல்வி நிலை, பெற்றோர்கள், பிரதேசவாசிகள், ஆசிரியர்கள் போன்றோரின் கருத்துக்கள் இவ்வாய்வில்
கவனத்திற் கொள்ளப்பட்டுள்ளன. அவ்வகையில் வினாக்கொத்து முறை, பேட்டிமுறை, கலந்துரையாடல்
மூலம் முதலாம் நிலைத்தரவுகளும், கிராம சேவகர் அறிக்கை, பாடசாலை அறிக்கைகள்,
புள்ளிவிபரங்கள் மூலம் இரண்டாம் நிலைத்தரவுகளும் திரட்டப்பட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஆய்விற்காக அமெரிக்க உளவியலாளர் மாஸ்லோவின் “தேவைக்கோட்பாடு” பயன்படுத்தப்பட்டுள்ளது.
அத்தோடு ஆய்வினோடு தொடர்புடைய மாறிகளான பாடசாலை மாணவர்களிடமும், பெற்றோர்களிடமும்
தரவுகள் திரட்டப்பட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன் மூலம் இன்று சமூக ஊடகங்களாது 51%
மாணவர்களால் பயன்படுத்தப்படுவது ஆய்வின் மூலம் அறிந்து கொள்ளப்பட்டது. சமூக ஊடகங்களான
முகப்புத்தகம், வட்ஸ் அப், இன்ஸ்டகிராம், யுடியுப், ஸ்கைப், வைபா் ஆகியன பரவலாக மாணவர்களால்
பயன்படுத்தப்படுகின்றன. இவ்வாறான சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்துவதால் மாணவர்கள்
மத்தியில் கல்வியில் மந்தகதி, ஞாபக மறதி, தனிமைப்படுத்தப்படுதல், சமூக ஊடகங்களால் அதிகமாக
உள்ளீர்க்கப்படுதல் போன்ற பாதிப்புகள் ஏற்படுகின்றன என்பதைக் கண்டறிய முடிந்தது.