Abstract:
உலகில் தோன்றிய அனைத்துச் சமூகங்களிலும் தாய்வழிச் சமூக அமைப்பே நிலவியுள்ளது.
மனித நாகரிகம் மேம்படத் தொடங்கியபோது, பெண் தனது தனித்துவத்தை இழக்க நேரிட்டது. தாய் வழிச்
சமூக அமைப்பு தந்தைவழிச் சமூக அமைப்பாக மாற்றங் கண்டது. ஆயினும், பண்டைய மரபின் எச்சங்கள்
சமூக அமைப்பின் சில கூறுகளில் இன்றும் தங்கிக் காணப்படுகின்றன. தந்தைவழி ஆதிக்கம் சமூகத்தை
ஆக்கிரமித்துள்ள சூழலில், இலக்கிய ஆய்வுகள் சில தாய்வழிச் சமூக அமைப்பின் எச்சங்களை மையப்படுத்தி
பண்டைய பண்பாட்டை † தாய்வழிச் சமூக அமைப்பை எடுத்தியம்புவனவாக வெளிவந்துள்ளன. இந்நிலையில்,
கள ஆய்வுத்தகவல்களை மையம்கொண்டு தாய்வழிச் சமூக அமைப்பின் ஒரு கூறாக அமையும் மருமக்கள்
தாயம் குறித்த ஒரு முன்வரைபு இங்கு மேற்கொள்ளப்படுகிறது. உரித்துக்கள் மருமக்கள் வழி கைமாறப்படும்
தாய்வழி எச்சத்தின் ஒரு கூறு இங்கு சமூகவியல் ஆய்வின் அடிப்படையில் முன்வைக்கப்படுகிறது. மருமக்கள்
தாயம் குறித்த தெளிவும் அது கிழக்கிலங்கைத் தமிழரிடத்தில் நிலைகொண்டுள்ளவாறும் ஆலயம் என்ற சமூக
நிறுவனத்தை அடிப்படையாகக் கொண்டே ஆராயப்படவுள்ளது.
இருபதாம் நூற்றாண்டின் நடுப்பகுதி வரையிலும் கேரளத்தில் உரித்துக்கள் மருமக்கள் வழி கைமாறப்படும்
மருமக்கள் தாயம் எனும் மரபு காணப்பட்டது. பிற்பட்ட காலத்தில் அரசின் தலையீட்டால் அம்மரபு
தடைசெய்யப்பட்டது. ஆயின், கிழக்கிலங்கைக்கும் கேரளத்திற்கும் இடையே நிலவிய தொடர்பின் வழி
கிழக்கிலங்கையில் கால்கொண்ட மருமக்கள் தாயம் இன்று வழக்கொழிந்து போகாது காணப்படுகிறது.
அத்தகைய பேணுகை ஆலயம் என்ற நிறுவனத்தை மையமிட்டே பெரும்பாலும் காணப்படுகிறது. அண்மைக்
காலமாக அத்தகைய பேணுகையில் நெகிழ்ச்சிப் போக்குகள் சில இடம்பெறுவதனையும் அவதானிக்க
முடிகிறது. மேற்படி ஆய்வு கள ஆய்வையே முழுவதுமாக மையம்கொள்கிறது. கள ஆய்வுத்தகவல்கள்
யாவும் சமூதாயவியல், வரலாற்றியல் அணுகுமுறைக்குட்படுத்தப்பட்டு பகுப்பாய்வு செய்யப்படவுள்ளன.