Abstract:
கோறளைப்பற்று வடக்குப் பிரதேசத்தில் முன்பள்ளிகளின் செயற்பாடுகள் எத்தகைய சவால்களை எதிர்நோக்கின்றன
என்பதையும் முன்பள்ளிகளின் தற்போதைய நிலையையும் அறிவதாகவே இவ்வாய்வு அமைந்துள்ளது. ஆய்வுப்
பிரதேசமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் அமைந்துள்ள கோறளைப்பற்று வடக்கு (வாகரை) பிரதேசம் அமைந்துள்ளது.
தரவுகள் சேகரிப்பதற்கான மாதிரி எடுத்தலாக 20 முன்பள்ளிகள் தெரிவு செய்யப்பட்டன. இம்முன்பள்ளிகளின்
ஒவ்வொரு ஆசிரியர் வீதம் தெரிவு செய்யப்பட்டு வினாக்கொத்து மூலம் தரவுகள் பெறப்பட்டன. அத்துடன் இப்பிரதேச
முன்பள்ளி கல்வி உத்தியோகத்தருடனான நேர்முகம்காணல் மூலமும் தரவுகள் பெறப்பட்டு இவ்வாய்வுக்குப்
பயன்படுத்தப்பட்டுள்ளன. தரவு சேகரிப்பு முறையாக ஆசிரியர்களுக்கான வினாக்கொத்தும் முன்பள்ளி
உத்தியோகத்தருடான நேர்முகம் காணலும் பயன்படுத்தப்பட்டுள்ளன. தரவுப் பகுப்பாய்வு நுட்ப முறைகளாக பண்புசார்
அணுகுமுறை, அளவுசார் அணுகுமுறை பயன்படுத்தப்பட்டுள்ளன. பண்புசார் அணுகுமுறையில் தரவு பகுப்பாய்வு
செய்யும் போது சேகரிக்கப்பட்ட தரவுகளில் இருந்து பொதுவாகக் கருப்பொருளைக் கண்டறிதலும் இனங்காணப்பட்ட
அம்சங்களிடையே தொடர்புகளை உருவாக்குதலும் இடம்பெறும். அளவுசார் அணுகுமுறையிலே சதவீதம் கணித்தல்,
தரவுகளை அட்டவணைப்படுத்தல், போன்ற விடயங்கள் முக்கியம் பெறுகின்றன. தரவுப் பகுப்பாய்வின் போது இவ்விரு
முறைகளும் பயன்படுத்தப்படுகின்றன. பிரதான பகுப்பாய்வு நுட்பங்களாகத் தரவுகளை அட்டவணைப்படுத்தல்,
நூற்றுவீதம் கணித்தல் என்பன இங்கு பயன்படுத்தப்பட்டுள்ளன. இவ்வாய்வின் முடிவில் முன்பள்ளிகளின் வளர்ச்சியில்
பெற்றோர்களின் பங்களிப்பு என்பது போதுமானதாக அமைந்திருக்கவில்லை என்ற விடயம் கண்டறியப்பட்டுள்ளது.
இதற்கான காரணம் பெற்றோர்கள் படிப்பறிவு குறைந்தவர்களாகக் காணப்படுகின்றமையும் கற்றலுக்கான வாய்ப்புக்கள்
அண்மித்ததாக அமையாமையுமாகும். 56% ஆனோரின் கருத்துப்படி பெற்றோரின் பங்களிப்பு போதுமானதாக
அமைந்திருக்கவில்லை என்பதையே வெளிப்படுத்தியுள்ளனர். அத்துடன், அரச சார்பற்ற நிறுவனங்களின் பங்களிப்பு
காண்பபட்டாலும் நிரந்தரமாக நீடித்து செயற்படத்தக்க வகையில் அமைந்திராமை ஒரு குறைபாடாகும். இது
தொடர்பில் 78% ஆனோரின் கருத்துப்படி இவற்றின் பங்களிப்பு போதுமானதாக அமைய வில்லை என்பதையே
வெளிப்படுத்தியுள்ளனர். அத்துடன் அரசசார்பு நிறுவனங்களின் பங்களிப்பும் திருப்திகரமாக அமைந்திருக்கவில்லை
என்பது 72% ஆனோரின் கருத்தாகும். முன்பள்ளி உத்தியோகத்தரின் கருத்துக்கள் மூலம் அப்பிரதேசத்தில வாழும்
மக்களின் அடிப்படை வாழ்வாதாரப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் போது இப்பிரதேச முன்பள்ளிக் கல்வி
தொடர்பிலான மாற்றங்களை இனங்காண முடியும் என்பதையும் இவ்வாய்வின் மூலம் அறிந்து கொள்ள முடிகின்றது.