Abstract:
சமூகப் பணியும் அதில் முஸ்லிமின் ஈடுபாடும் இஸ்லாத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது. இன்று இப்பணியில் முஸ்லிம் பெண்களின் ஈடுபாடும், ஆர்வமும் அதிகரித்து வருகின்றது. இந்த வகையில் இக்கற்கை மள்வானை உளஹிடுவல பிரதேசத்தில் முஸ்லிம் பெண்களின் சமூக சேவை ஈடுபாட்டை கண்டறிதலையும் இந்த ஈடுபாட்டுக்கான அவர்கள் மீதான இஸ்லாமிய இயக்கங்களின் செல்வாக்கினை பரிசிலித்தலையும் பிரதான குறிக்கோளாக கொண்டுள்ளது. பண்பு ரீதியான இக்கற்கை, உளஹிடுவல பிரதேசத்தில் குறிக்கோள் மாதிரி அடிப்படையில் தெரிவு செய்யப்பட்ட சமூக சேவைப் பணிகளில் ஈடுபடும் 45 முஸ்லிம் பெண்களிடமிருந்து நேர்காணல் மூலம் பெறப்பட்ட தரவுகளின் பகுப்பாய்வு அடிப்படையிலானது. இவ்வாய்வின் பிரதான கண்டறிதல்களாக பின்வருவனவற்றை குறிப்பிடலாம். சாதாரன கல்வித் தகைமையையுடைய குடும்பப் பெண்களான இவர்கள் இப்பிரதேசத்தில் கல்வி, சமயம், பொருளாதாரம் ஆகிய துறைகளின் மேம்பாட்டிற்கு பங்காற்றுகின்றனர். இஸ்லாத்தின் போதனைகளே அவர்களின் சமூக சேவை ஆர்வத்திற்கான பிரதான தூண்டல்களாகும். இஸ்லாமிய இயக்கங்கள் இப்பெண்களின் ஈடுபாட்டிற்கான ஆதரவு, அனுசரனை என்பவற்றை வழங்குகின்றன. மேலும் இப்பெண்களில் அநேகர் ஒன்றில் இஸ்லாமிய இயக்கங்களின் தீவிர ஆதரவாளர்கள் அல்லது அவற்றின் உறுப்பினர்களாக காணப்படுகினறனர்.