Abstract:
வளர்ச்சியடைந்து வருகின்ற நாடுகளில் வறுமையைக் குறைப்பதற்கான முக்கியமான ஒரு கருவியாக நுண்நிதி கருதப்படுகின்றது.அந்தவகையில் வறுமைத் தணிப்பில் நுண்நிதி எத்தகைய பங்கினை வகிக்கின்றது என்பதனைக் கண்டறிவதே இவ்ஆய்வின் நோக்கமாக அமைகின்றது. யாழ்மாவட்டத்தில் நுண்நிதி வழங்கலில் சிக்கனக் கடனுதவு கூட்டுறவுச்சங்கங்கள் முக்கிய பங்கினை வகிக்கின்றன. எனவே இவ்வாய்வு யாழ்மாவட்டத்தில் வறுமைத்தணிப்பில் நுண்நிதியின் பங்குபற்றி, விசேடமாக சிக்கன கடனுதவு கூட்டுறவுச்சங்கங்களின் நுண்நிதி வழங்கலும் அதனூடான வறுமைத் தணிப்பும் ஆய்வுசெய்யப்படுகின்றது.
ஆய்வுப்பிரதேசத்தில் சிக்கன கடனுதவு கூட்டுறவுச்சங்கங்கள் மூலமாகக் கடன்பெறும் 100 பயனாளிகள் தெரிவுசெய்யப்பட்டு அவர்களுக்கு வினாக்கொத்துகள் வழங்கப்பட்டு அதன்மூலம் பெறப்பட்ட தரவுகளின் அடிப்படையிலும், இரண்டாம் நிலைத் தரவுகளின் அடிப்படையிலும் இவ்வாய்வு விபரணரீதியாக மேற்கொள்ளப்பட்டுள்ளது. பெறப்பட்ட தரவுகள், தகவல்கள் என்பவற்றை ஒழுங்குபடுத்தி ஆய்வின் நோக்கம் உள்ளடக்கம் என்பவற்றுக்கு பொருத்தமான அட்டவணைகள், வரைபடங்கள் என்பவற்றினூடாக விளக்கப்பட்டு முடிவுகள் பெறப்பட்டுள்ளன. பெறப்பட்டுள்ள முடிவுகளின் அடிப்படையில் நிறுவனங்கள் நுண்நிதி வழங்குவதுடன் மட்டும் நின்றுவிடாது பயனாளிகளுக்கு பயிற்சிகள் வழங்கவேண்டும். தொழிலுக்கான காப்புறுதி, சேமிப்புத் தொடர்பான விளக்கங்களை வழங்குதல் போன்றவற்றையும் வழங்குவதன் மூலம் நுண்நிதியினை வறுமைத்தணிப்பிற்கான முக்கியமான ஒருகருவியாக மாற்றமுடியும் என்பதாகும்.