Abstract:
யுத்தத்தால் இடம்பெயர்ந்து மீளக்குடியேறியவர்களின் வாழ்வாதார நிலை என்னும் இந்த ஆய்வானது இலங்கையின் வடபுலத்தே 2009 ஆம் ஆண்டு இடம்பெற்ற இறுதிக்கட்ட யுத்தத்தினைத் தொடர்ந்து யாழ்பபாணப்பிரதேச செயலர் பிரிவில் மீளக்குடியமர்த்தப்பட்ட மக்களின் வாழ்வாதார நிலையினை ஆராய்வதாகவுள்ளது. இந்த ஆய்வின் பிரதான நோக்கம் மீளக்குடியமர்த்தப்பட்டவர்களின் வாழ்வாதாரத்தில் யுத்தம் ஏற்படுத்தியுள்ள தாக்கத்தினையும் அவர்களின் தற்போதைய வறுமை நிலையினையும் கண்டுபிடிப்பதாக அமைந்துள்ளது. இந்த நோக்கத்துக்கேற்ப பின்வரும் இரண்டு கருதுகோள்கள் முன்வைக்கப்பட்டுள்ளது முதலாவதாக ”மீளக்குடியமர்த்தப்பட்டவர்களின் வாழ்வாதாரம் யுத்தத்தின் பின் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது” என்ற கருதுகோளும் இரண்டாவதாக ” மீளக்குடியமர்த்தப்பட்டவர்கள் முழு வறுமையினை அனுபவிக்கின்றார்கள்” என்ற கருதுகோளும் முன்வைக்கப்பட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது மேலும் இந்த ஆய்வுக்குத் தேவையான தரவுகள் முதலாம் நிலை மற்றும் இரண்டாம் நிலைத் தரவு மூலங்களில் இருந்து பெறப்பட்டுள்ளதுடன் பெறப்பட்ட பச்சைத் தரவுகள் புள்ளிவிபரவியல் மென்பொருளான SPSS என்பதன் உதவியுடன் புள்ளிவிபரவியல் தரவுகளாக்கப்பட்டு விவரணப் புள்ளிவிபரவியல் முறையினை அடிப்படையாகக் கொண்டு பகுப்பாய்வு செய்யப்பட்டுள்ளது. ஆய்வின் முடிவாக மீளக்குடியமர்த்தப்பட்டவர்களின் வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளமையும் அவர்களில் அரைவாசிக்கும் மேற்பட்டவர்கள் முழு வறுமையில் வாழ்கின்றமையும் கண்டறியப்பட்டுள்ளது.