Abstract:
கல்வி மனிதனுக்கான முக்கிய உரிமையாக இருந்த போதிலும் அதனைத் தொடராகப் பெற்றுக்
கொள்வதற்குத் தடையாக பல காரணிகள் உள்ளன. பாடசாலை இடைவிலகல் அவற்றுள்
செல்வாக்குச் செலுத்தும் மிக முக்கிய ஒரு காரணியாகும். அட்டாளைச்சேனைப் பிரதேசத்தில்
அமைந்துள்ள சம்புநகர் மற்றும் ஆலம்குளம் ஆகிய இரு பின்தங்கிய கிராமங்களில் பாடசாலை
இடைவிலகல் அவதானிக்கப்பட்டதால் அவ்விரு பிரதேசங்களையும் மையப்படுத்தி இவ்வாய்வு
மேற்கொள்ளப்பட்டுள்ளது. பாடசாலை இடைவிலகல் இருக்கின்றதா? என்பதை கண்டறிவதோடு
மாணவர்களின் இடைவிலகலுக்கான காரணங்களை இனங்காணுவதையும் இவ்வாய்வு
நோக்கங்களாகக் கொண்டுள்ளது. இந்நோக்கங்களை அடையும் வகையில் முதலாம்நிலைத்
தரவுகளும் இரண்டாம் நிலைத் தரவுகளும் பெற்றுக் கொள்ளப்பட்டன. முதலாம்நிலைத் தரவுகளைப்
பெறுவதற்காக நேரடியாக அப்பிரதேசங்களுக்குப் பலமுறை சென்று உரியவர்களிடம்
கலந்துரையாடல்கள் நடைபெற்றது. அப்பிரதேசங்களின் பாடசாலை அதிபர்கள், பெற்றோர்கள் மற்றும்
மாணவர்களிடமிருந்து நேர்காணலின் மூலமும் இரண்டாம்நிலைத் தரவுகளை பாடசாலை
ஆவணங்கள், பிரதேச செயலக ஆவணங்கள், ஆய்வுகள், கட்டுரைகளின் ஊடாகவும் பெறப்பட்டன.
பெறப்பட்ட தகவல்கள் நுஒஉநட விரிதாள் மூலம் பகுப்பாய்வு செய்யப்பட்டு, விபரிக்கப்பட்டுள்ளன.
ஆய்வுப் பிரதேசங்களில் பாடசாலை இடைவிலகல் தெளிவான காணப்படுவதனையும் அது தரம் 6-11
இல் வளர்ச்சியடைந்து வருவதனையும் கண்டறிய முடிந்தது. அத்தோடு மாணவர் இடைவிலகலில்
செல்வாக்குச் செலுத்தும் காரணிகளாக வறுமை, தொழில், இளவயதுத் திருமணம், பெற்றோர்களின்
கவனக்குறைவு, போக்குவரத்துக் கஷ்டம், பாதுகாப்பின்மை, மாணவர்கள் கல்வியில் ஆர்வமின்மை
போன்றன இனங்காணப்பட்டன. இறுதியில் இப்பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான சில விதந்துரைகளும்
முன்வைக்கப்பட்டுள்ளன.