Abstract:
மொழி என்பது கருத்துப் பரிமாற்றத்திற்கான ஊடகம். அந்த ஊடகம் எப்போதும் யதார்த்த நிலையில்
தகவல் பரிமாற்றத்திற்காக பயன்படுத்தப்பட வேண்டும். மொழியின் இறுதி இலக்கு இலக்கிய
படைப்புக்களாகும். சிறுகதை அதில் அற்புதமானதொரு வடிவம். அது சமூகமொன்றின் குரலாக
மாறும்போது அதன் வீரியம் பன்மடங்காகும். கிழக்கிலங்கை மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த
ஓட்டமாவடி அறபாத் பத்துக்குமேற்பட்ட நூல்களுக்குச் சொந்தக்காரர். அவருடைய சிறுகதைகள்
'உடைந்த கண்ணாடிகளில் மறைந்திருக்கும் குருவி' என்ற பெயரில் 2008 இல் வெளியிடப்பட்டன.
இலங்கை தமிழ் சிறுகதைகளில் அறபு மொழிச் சொற்கள் பல கலந்துள்ளன. இவ்வாய்வு, இலங்கைச்
சிறுகதைகளில் காணப்படும் அறபு மொழிச்சொற்களின் செல்வாக்கினை கண்டறிதலும் அச்சொற்களை
அறிமுகப்படுத்தி, அதற்கான காரணங்களை இனங்கண்டு வெளிக்கொணர்வதன் மூலம் இரு
மொழிகளுக்கிடையினான இடைத் தொடர்பினை ஆய்வு செய்தல் மற்றும் இச்செல்வாக்கு மொழியின்
அழகியலிலும் இலக்கியத்திலும் எத்தகைய தாக்கத்தினை கொண்டுள்ளது எனக் கண்டறிந்து
விளக்குதல் ஆகிய நோக்கங்களைக் கொண்டுள்ளது. அந்த வகையில் குறித்த நூலில் 162 அறபுச்
சொற்கள் உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. இந்நூலில் கண்டறியப்பட்டுள்ள சொற்கள் அன்றாட
வாழ்வுடன் தொடர்புடையவையாக உள்ளன. பேச்சு மொழியில் இவை பாரிய ஆதிக்கம்
செலுத்துகின்றன. இச்சொற்களை பெரும் இரண்டு பகுதிகளாக வகுக்க முடியும். ஒன்று சாதாரண
பெயர்ச்சொற்கள். அடுத்தது, நபரொருவருக்கு அல்லது இடம் ஒன்றிற்கு பெயராகப் பயன்;படுத்துதல்.
அதேநேரம் இச்சொற்கள் அறபு மொழியில் என்ன நோக்கத்திற்காக வைக்கப்பட்டுள்ளதோ அதே
நோக்கத்தில் இங்கும் பயன்படுத்தப்படுகின்றது. ஆயினும், சில சொற்கள் எழுத்தில் தமிழுக்கு ஏற்ப
மருவியும் உள்ளமை குறிப்பிடத்தக்கது. அறபு மொழிச் செல்வாக்கானது சமய, பொருளாதார, சமூக
மற்றும் மொழியியல் காரணிகளினால் ஏற்படுகின்றமை கண்டறியப்பட்டுள்ளது. அத்துடன், அறபு மொழி
இலங்கை முஸ்லிம்களின் மத, கலாசார, விழுமியங்களுடன் தொடர்புபட்ட ஒன்றாக இருப்பதுடன்
இறை வேதம் அல்-குர்ஆன் அறபு மொழியில் அருளப்பட்டுள்ளதாலும் அதனை புரிந்து
கொள்வதற்காக அதிகமாக இதனை பயன்படுத்துகின்றனர் என்பதே மிக முக்கிய காரணியாகும்.
இவ்வாய்வுக்காக விவரண மற்றும் பகுப்பாய்வியல் முறைகள் பயன்படுத்தப்பட்டன. முதலாம்
நிலைத்தரவான நேர்காணல் முறை பயன்படுத்தப்பட்டு தேவையான தகவல்கள் சேகரிக்கப்பட்டன.
இரண்டாம் நிலைத்தரவுகளாக நூல்கள், சஞ்சிகைள், பத்திரிகைகள் மற்றும் இணையம்
போன்றவற்றின் மூலம் தரவுகள் பெறப்பட்டு ஆய்வுக்குட்படுத்தப்பட்டன.