Abstract:
கிரேக்கச் சிந்தனை வளர்ச்சியானது இஸ்லாமியக் கலாசாரத்திற்குள் ஊடுறுவியபோது அதன்பாலான
அறிவுப்போக்குகள் உருவாக்கம் பெற்றன. இஸ்லாமிய ஏகத்துவக் கோட்பாட்டின் மீதான
நுண்ணாய்வுப் பரிசோதனைகளுக்கு அது வழிவகுத்தது. சமய ஆன்மீக விளக்கங்களைக் கொண்ட
இறையியல் வாதமானது மெய்யியல் ஆய்வுக்கும் பகுத்தறிவு நோக்கிற்கும் உள்ளானதாகும். இதன்
அடிப்படையில் கிரேக்கத்தை ஆதாரமாகக்கொண்ட ஒழுக்க மெய்யியலின் எழுச்சி முஸ்லிம்
மெய்யியலிலும் வலுப்பெறலாயிற்று. அல் ஹிந்தி, அல் பராபி, இப்னு சீனா, இப்னு ருஷ்ட், இமாம்
கஸ்ஸாலி, இப்னு மிஸ்கவாஹ் போன்ற முஸ்லிம் மெய்யியலாளர்களின் ஒழுக்கவியல் சிந்தனைகள்
முஸ்லிம் மெய்யியலில் செல்வாக்குப் பெற்றவையாகும். முஸ்லிம் பகுத்தறிவுச் சிந்தனையாளர்களின்
கருத்தில் இறைவனுடைய சாரம், அவனுடைய கட்டளைகளின் மீளாத்தன்மை, அவனுடைய தார்மீகப்
பொறுப்புக்களின் சுதந்திரம், அதன் முன் நிபந்தனைகள் என்பன பற்றிய உள்ளடக்கம்
அமைந்துள்ளது. இவர்களது இறையியல் ஒழுக்கமானது கிரேக்க மெய்யியலின் செல்வாக்கிற்கு
உட்பட்டுக் காணப்பட்டது. நீதி, அநீதி, நன்மை, தீமை, மகிழ்ச்சி, விழுமியம், அன்பு, ஞானம்,
ஆன்மீகம், இறை நாட்டம், இறை திருப்தி எனப் பல்வேறு தளங்களில் ஒழுக்க மெய்யியல்
கருத்துக்கள் முஸ்லிம் மெய்யியல் சிந்தனையில் கலந்துரையாடப்பட்டுள்ளன. இத்தகைய ரீதியில்
முஸ்லிம்; மெய்யியல் சிந்தனையில் ஒழுக்கவியல் முக்கியத்துவத்தை பகுப்பாய்வு செய்வதை
நோக்கமாகக் கொண்டதாக இவ்வாய்வு அமைகின்றது. இது இரண்டாம் தரவுகளை
அடிப்படையாகக்கொண்ட பண்புசார் ஆய்வாகும். இதற்கான தரவுகள் புத்தகங்கள், இணையத்தளக்
குறிப்புக்கள், முன்னைய ஆய்வுகள் என்பவற்றிலிருந்து பெறப்பட்டவையாகும். இதில் விளக்கமுறை,
விமர்சனமுறை என்பன பயன்படுத்தப்பட்டுள்ளன.