Abstract:
உலக நாடுகளில் மிக வேகமாக முன்னேறி வருகின்ற துறைகளுள் சுற்றுலாத்துறையும் ஒன்றாகும்.
ஊலகம் சுற்றும் நபர்களின் எண்ணிக்கை 1997ல் 61.3 கோடியாக இருந்தது. 2020க்குள் 160 கோடியாக
அதிகரிக்கும் என உலக சுற்றுலா அமைப்பு அறிவித்துள்ளது. இத்துறையானது ஒரு நாட்டின்
பொருளாதார விருத்தியில் அதிக பங்களிப்பை யும் அதிக அந்நிய செலாவணியை நாட்டிற்கு
ஈட்டித்தருவதிலும் அதிக பங்காற்றுகின்றது. இதேவேளை இன்று மாணவர்கள் எதிர்நோக்குகின்ற
பல்வேறுபட்ட சவால்களில் சுற்றுலாத்துறையின் விருத்தியினால் ஏற்படும் பாதிப்புக்கள்
அதிகமானதாகும். இந்த வகையில், பொத்துவில் அறுகம்குடா முஸ்லிம் மாணவர்கள் சுற்றுலாத்துறை
விருத்தியினால் எதிர்நோக்குகின்ற கல்வி மற்றும் ஒழுக்கம் சார் பிரச்சினைகள் முக்கியமானவையாக
அடையாளப்படுத்தப்பட்டுள்ளன. இந்த வகையில் இலங்கையின் அம்பாறை மாவட்டத்தில்
அமைந்துள்ள பொத்துவில் அறுகம்குடா பிரதேசமானது அலைச்சறுக்கல் விளையாட்டில் பிரசித்தி
பெற்ற பிரதேசமாக இருப்பதனால் யுத்தத்திற்கு பிந்திய காலப்பகுதியில் உள்நாட்டு வெளிநாட்டு
சுற்றுலாப் பயணிகளின் வருகை “visit sri lanka year 2011” ன் பின்னர் வருடா வருடம் அதிகரித்த
வண்ணமுள்;ளது. இதன் காரணமாக இங்கு வாழும் மாணவர்கள் கல்வி மற்றும் கலாசார
பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்து வருகின்றனர். இந்த வகையில் இவ்வாய்வின் நோக்கமானது
சுற்றுலாத்துறையின் விருத்தியினால் மாணவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை
அடையாளப்படுத்துவதும், ஆய்வுப் பிரதேசத்தில் மாணவர்கள் பிரச்சினைகளை எதிர்கொள்வதில்
சுற்றுலாப் பயணிகளின் பங்களிப்பினை இனங்காணுதல் மற்றும் இப்பிரச்சினைகளை தீர்ப்பதற்கான
தீர்வுகளை முன்வைப்பதுமாகும். இந்த ஆய்வானது முதலாம் நிலை மற்றும் இரண்டாம் நிலைத்
தரவுகளை மையமாகக் கொண்டு ஆய்வு செய்யப்பட்டுள்ளது. முதலாம் நிலைத் தரவுகளாக கள
ஆய்வு, நேர்காணல், நேரடி அவதானிப்பு, வினாக்கொத்துக்கள் என்பன பயன்படுத்தப்பட்டன.
பொத்துவில் அறுகம்குடா பிரதேசத்தில் உள்ள 3 பாடசாலைகளில் இருந்து 162 மாணவர்கள், 34
ஆசிரியர்களிடம் வினாக்கொத்துக்கள் வழங்கப்பட்டும், 50 பெற்றோர்கள், 3 ஆசிரியர்கள், 8 ஜூம்ஆ
பள்ளிவாசல்களின் இமாம்கள் ஆகியோரிடம் நேர்காணல் மூலம் தரவுகள் சேகரிக்கப்பட்டன.
இரண்டாம் நிலைத் தரவுகளாக சஞ்சிகைகள், புள்ளிவிபரத் திரட்டுக்கள், ஆய்வுக் கட்டுரைகள்,
இணையம் என்பன மூலம் பெற்றுக்கொள்ளப்பட்டன. இத்தரவுகள் பண்புசார்பாக இருப்பதனால் விடய
விபரிப்புக்கு உட்படுத்தப்பட்டு முடிவுகள் பெறப்பட்டது. இதற்கு MS Excel மென்பொருள்
பயன்படுத்தப்பட்டது. இவ்வாய்வின் மூலமாக கல்வியில் பின்னடைவு, கலாசார சீரழிவுகள்,
குற்றச்செயல்கள் அதிகரிப்பு, சுகாதாரப் கேடு, பாலியல் பலாத்காரம், போதைப் பொருள் பாவனை
போன்ற பிரச்சினைகள் அடையாளம் காணப்பட்டன. எனவே இப்பிரதேச மக்கள் மத்தியில்
விழிப்புணர்வை ஏற்படுத்தி இவ்வாறான பிரச்சினைகளை களைவதற்கு நடவடிக்கை எடுப்பது இளைய
சமூகத்திற்கு செய்ய வேண்டிய சேவையாகும்.