Abstract:
இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் அமையப் பெற்றுள்ள பீடங்களில் இஸ்லாமியக்
கற்கைகள் மற்றும் அறபு மொழி பீடத்திற்கு தனிச்சிறப்புண்டு. இவ்வகையில் இப்பீடம் வழங்குகின்ற
பாடநெறிகளின் பெறுமானம் மற்றும் அப்பாடநெறிகள் தொடர்பான மாணவர்கள் மற்றும்
விரிவுரையாளர்களின் மனோநிலை யாது என்பதைக் கண்டறிவதாக இவ்வாய்வு அமைந்துள்ளது.
பண்பு மற்றும் அளவு ரீதியில் அமைந்த இவ்வாய்வு இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில்
அமைந்துள்ள ஆறு பீடங்களுள் பிரயோக விஞ்ஞான பீடம் மற்றும் தொழிநுட்ப பீடம் தவிர்ந்த ஏனைய
நான்கு பீடங்களின் மூன்றாம் வருட மாணவர்கள் மற்றும் விரிவுரையாளர்கள் அடங்களாக மொத்தம்
300 பேர்களிடம் வழங்கப்பட்ட வினாக்கொத்துக்களின் அடிப்படையில் தரவுகள் பெறப்பட்டு, பகுப்பாய்வு
செய்யப்பட்டுள்ளது. இஸ்லாமியக் கற்கைகள் மற்றும் அறபு மொழிப் பீடம் வழங்கும் பாடநெறிகள்
தேசிய மற்றும் சர்வதேச ரீதியில் பரந்துபட்டதாகவும் தொழில் சந்தை எதிர்பார்க்கின்ற பாடங்களை
உள்ளடக்கியதாகவும் அதற்கு மேலாக இஸ்லாமிய அறிவை பாரியளவில் வழங்குவதாகவும்
காணப்பட்ட போதிலும் 04 பீடங்களைச் சேர்ந்த மூன்றாம் வருட மாணவர்கள் மற்றும்
விரிவுரையாளர்களின் இது தொடர்பான மனோநிலை வித்தியாசமாக அமைந்துள்ளது. இங்குள்ள
பாடநெறிகளைக் கொண்டு தொழில் வாய்ப்பினைப் பெறமுடியாதுள்ளதோடு, வெறும் இஸ்லாமிய
விடயங்களே கற்பிக்கப்படுகின்றது என விமர்சிக்கப்படுகிறது. இருப்பினும் இத்தாழ்வு மனோநிலைக்கு
புள்ளி நிர்ணயம் Z. Score, தொழில்வாய்ப்பு பெறுவதில் காலதாமதம், இத்துறைசார் ஆசிரியர்
நியமனம், மௌலவி சான்றிதழ் தகைமைகளாகக் கொள்ளப்படல் போன்ற வெவ்வேறு காரணங்கள்
காணப்படுகின்றன. உண்மையில் இப்பீடம் வழங்கும் பாடத்திட்டம் தொழில் சந்தைக்கு ஏற்புடையது.
அதனை பல்கலைக்கழக மானிய ஆணைக்குழு அங்கீகரித்துள்ளது. பாடத்திட்டத்தில் உள்ள
குறைபாடு அன்றி, நாட்டில் தொழில் இன்மையே குறைபாடாக அமைந்துள்ளது. ஆகவே, இவ்வாய்வு
இஸ்லாமியக் கற்கைகள் மற்றும் அறபு மொழி பீடம் வழங்கும் பாடத்திட்டம் பற்றிய பூரண அறிவைத்
தருவதாகவும் எதிர்காலத்தில் இவ்விடயத்தில் ஆய்வை மேற்கொள்வோருக்கு உதவுவதாகவும்
அமைகிறது.