Abstract:
பல்வேறுபட்ட சமூகவியல் காரணிகளின் அடிப்படையில் பெண்களின் திருமண வயது
முற்படுத்தப்படுகின்றது. இலங்கைச் சட்டத்திற்கு அமைவாக பெண்களின் திருமண வயதானது
சர்ச்சைக்குள்ளான ஒரு பகுதியாகவே காணப்படுகிறது. இலங்கையில் பல இடங்களில் இளவயது
திருமணம் அதிகரித்துக் கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. இதனடிப்படையில்
அட்டாளைச்சேனை சம்புநகர் மற்றும் ஆலங்குளம் பிரதேச முஸ்லிம் பெண்களின் திருமண வயது
மிகவும் குறைவானதாகவே உள்ளது. இவ்வாய்வு அப்பிரதேசத்தில் இளவயது திருமணத்தின்
காரணங்களை இனங்கண்டு அத்திருமணம் அவர்களின் வாழ்வில் எவ்வாறான தாக்கங்களை
ஏற்படுத்துகிறது எனவும் எவ்வாறான பிரச்சினைகளுக்கும் சவால்களுக்கும் அப்பெண்கள்
முகங்கொடுக்கின்றனர் என்பதையும் கண்டறிவதே இவ்வாய்வின் முக்கிய நோக்கமாகும். சமூகவியல்
கலப்பு ஆய்வான இதில் முதலாம் நிலைத்தரவுகளாக பிரதேச முஸ்லிம் பெண்களிடம் பெறப்பட்ட
வினாக்கொத்து, கலந்துரையாடல் என்பனவும் இரண்டாம் நிலைத்தரவுகளாக ஆய்வு தொடர்பான
முன்னைய ஆய்வுக் கட்டுரைகள், சஞ்சிகைகள், புத்தகங்கள் என்பனவும் பயன்படுத்தப்பட்டன.
இவ்வாய்வு பிரதேச முஸ்லிம் பெண்களின் இளவயது திருமணத்திற்கான காரணங்களில் பொருளாதார
பிரச்சினை, காதல் விவகாரம், வழக்காறு என்பன முக்கியமாக அமைவதுடன் அத்திருமணத்தின்
மூலம் அப்பெண்கள் உடல், உள, சமூக, பொருளாதார ரீதியான பல பிரச்சினைகளையும்,
சவால்களையும் எதிர்நோக்குகின்றனர் என்பது கண்டறியப்பட்டது. மேலும் அவர்களின்
பிரச்சினைகளை தீர்ப்பதற்கு ஆலோசனைகளும் இவ்வாய்வில் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.