Abstract:
ஒரு மனிதன் தன் அன்றாட வாழ்க்கையில் அடிப்படைத்தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்வதற்கும்
அதற்கான செலவீனங்களை எதிர்வு கொள்வதற்கும் மற்றும் தனக்கான நிலையான வாழ்வொன்றினை
ஏற்படுத்துவதற்கும் வாழ்வாதாரம் தேவைப்படுகின்றது. அவ்வாழ்வாதாரம் இல்லாதபோது, அது
அவனது அனைத்துத் துறைகளிலும் தாக்கத்தினை ஏற்படுத்துகிறது.
ஆய்வுப்பிரதேசமான சம்பூநகர் கிராமத்தில் குறித்த ஆய்வுப் பிரதேசத்தில் காணப்படுகின்ற
வாழ்வாதாரப் பிரச்சினைகளை, சவால்களை கண்டறிதலை பிரதானமாகவும் குறிப்பிட்ட அம்மக்களின்
வாழ்க்கை நிலை மற்றும் அம்மக்களின் அன்றாடத் தொழில் முயற்சிகளை கண்டறிதல் போன்ற
நோக்கங்களைக் கொண்டு இவ்வாய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவ்வாய்வானது
பண்புரீதியானதாகக் காணப்படும் அதேவேளை சுமார் 75 குடும்பங்களைக் கொண்ட முழுக்கிராமமும்
ஆய்வுக்குற்படுத்தப்பட்டது. இதன்போது நேர்காணல் மற்றும் அவதானம் என்பவற்றை மையமாகக்
கொண்டு பெறப்பட்ட முதலாம் நிலைத் தரவுகள் Microsoft Excel மென்பொருளைப் பயன்படுத்தி
விபரணப் பகுப்பாய்வு மூலம் பகுப்பாய்வு செய்யப்பட்டுள்ளது.
ஆய்வுப்பிரதேசத்தில் வாழும் அதிகமான மக்கள் அங்கவீனர்களாக உள்ளதால் இம்மக்களது
வாழ்வாதார மேம்படுத்தலில் அது பாதிப்புச் செலுத்துகின்றது. ஒரு நாள்ப் பொழுதைக் கழிப்பதில்
கூட இம்மக்கள் பெரும் சிரமங்களை எதிர் கொள்கின்றனர். திருப்தியற்ற உணவு, உடை, இருப்பிடம்,
குடிநீர் வசதிகள், போக்குவரத்து வசதிகள் மற்றும் தொழில் வசதி என்பவற்றுக்கு மத்தியில்
அம்மக்களின் வாழ்க்கை தாண்டவமாடுகிறது. மருத்தவம், தொழில் வசதிகள் மற்றும் இரண்டாம்
நிலைக் கல்வி போன்றவற்றைப் பெற வெளிப் பிரதேசங்களை நாடிச்செல்ல வேண்டிய நிர்ப்பந்தச்
சூழல் காணப்படுகின்றது. இதனால் இவ்வாய்வுப் பிரதேசத்தில் வாழ்பவர்களின் வாழ்வாதாரமானது
திருப்தியானதாக இல்லை என்ற முடிவிற்கு வரலாம். மேலும், இப்பணிக்கான பங்களிப்பினை
அதிகரிப்பதற்கான ஆலோசனைகளையும் இவ்வாய்வு முன்வைக்கின்றது.