Abstract:
வரலாறு நினைவுக்கு முந்திய காலப்பகுதியில் இருந்தே இலங்கை அதன் இயற்கை அழகு மற்றும்
செழிப்பான பன்முக கலாசாரம் என்பனவற்றின் காரணமாக உலக அரங்கில் தனக்கான ஒரு இடத்தை
பிடித்துள்ளது. இலங்கைத் திருநாடு பேரினவாத பௌத்தர்களை பெரும்பான்மையாகவும் தமிழ்
முஸ்லிம் சமூகத்தினரை சிறுபான்மையாகவும் கொண்டு விளங்குகின்றது. அன்று தொடக்கம் இன்று
வரை தமிழ் - முஸ்லிம் சமூகத்தினர் மத்தியில் இன உறவு மற்றும் இன ஐக்கியம் என்பன வேரூன்றிக்
காணப்படுகின்றது. இவ் ஆய்வானது கல்முனை பிரதேசசபைக்குட்பட்ட நற்பிட்டிமுனைப் பிரதேசத்தில்
வாழும் தமிழ் - முஸ்லிம் இன உறவுகள் எவ்வாறு உள்ளது என்பதற்கான விடையை கண்டறிவதை
ஆய்வுப் பிரச்சினையாகக் கொண்டும் தமிழ் முஸ்லிம் சமூகத்தினரிடையே காணப்படும் இன
உறவுகளை ஆராய்வதனை நோக்கமாகக் கொண்டும் வடிவமைக்கப்பட்டது. இவ் ஆய்வானது
பண்புரீதியான ஆய்வாக காணப்படுவதோடு ஆய்விற்காக முதலாம் நிலைத் தரவுகள்
பொதுமக்களிடமிருந்து கட்டமைக்கப்படாத நேர்காணல் மற்றும் இலக்குக் குழு கலந்துரையாடல்கள்
மூலமும் இரண்டாம் நிலைத் தரவுகள் நூல்கள், ஆய்வுக் கட்டுரைகள், மதிப்பீட்டு அறிக்கைகள்
வாயிலாகவும் பெறப்பட்டன. இவ் ஆய்வின் மூலம் இன்றைய சூழலில் இனங்களுக்கு இடையில்
வன்முறைகள் குழப்பங்கள் மற்றும் இனவிரிசல்கள் காணப்படுகின்ற நிலையில் இப்பிரதேசமக்கள்
மத்தியில் பண்பாட்டு தழுவல்கள், கூட்டுக்கலாசார அமைப்பு, இணைந்துபோதல், ஒத்துப் போதல்
மற்றும் கலாசாரப் பரிமாற்றம் என்பன இன்றும்; இவர்கள் மத்தியிலான உறவை நல்லுறவாக
நிலைநிறுத்தி வைத்துள்ளது. இருப்பினும் கூட இரு சமூகத்தினது இளம் இளைஞர்கள் மத்தியில் சிறு
சிறு பிணக்குகளுடன் கூடிய முரண்பாடுகளும் சிறியளவில் இடம்பெறுகின்றன.