Abstract:
அண்மைக்காலங்களாக ஆசிய நாடுகளில் சிறுபான்மையினராக வாழ்கின்ற முஸ்லீம்களுக்கு எதிராக
கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கும் இனவாதத்தின் பின்னணியில் உருவான அடக்கமுறைகளின் உச்ச
வெளிப்பாடுகளிலொன்றுதான் மியன்மாரில் ரோஹிங்ய முஸ்லீம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டு
வருகின்ற இனச்சுத்தீகரிப்பு என்ற நிகழ்வாகும். பௌத்த பேரினவாத நாடுகளில் மியன்மாரும் ஒன்று.
அங்கு சிறுபான்மையினராக ரோஹிங்ய முஸ்லீம்கள் வாழ்கின்றனர். கடந்த பல வருடங்களாகவே
ரோஹிங்யர்கள் அங்கே வதைக்கப்படுகின்றனர் என்ற குரல்கள் சர்வதேசமெங்கும் ஓங்கி ஒலித்துக்
கொண்டிருக்கின்றன. ரோஹிங்கியர்கள் மியன்மாரின் வடக்குப் பகுதியான ராகைன் மாகாணத்தில்
வாழ்கின்றனர். ஏழாம் நூற்றாண்டிற்குப் பின்னர் ரோஹிங்கிய முஸ்லீம்கள் தமது வரலாற்றினை
அடையாளப்படுத்தும் முயற்சியில் ஈடுபடத்தொடங்கினர். இதுவே ரோஹிங்கிய முஸ்லீம்களுக்கும்
மியன்மார் அரசுக்கும் இடையிலான பிரிவினைக்கு தூபமிட்டிருந்தது. தொடர்ந்து ரோஹிங்கியர்களது
பிரஜாவுரிமை பறிக்கப்பட்டது. ரோஹிங்கிய இனத்தவர்கள் பங்காளி இனத்தவர்கள் எனவும் அவர்கள்
மியன்மார் இனத்தவர்கள் அல்லர் என்ற கருத்தும் 1956இல் இருந்து மியன்மாரில் பரவத்
தொடங்கியது. இதன் விளைவாகவே மியன்மார் நாடு பூராகவும் முஸ்லீம் மக்களுக்கு எதிரான
வன்முறைகள் கட்டவிழ்க்கப்பட்டன. இதனடிப்படையில் மியன்மார் அரசு ரோஹிங்கியர்கள் இடையில்
வந்தவர்களெனவும் சட்டவிரோதக் குடிகளெனவும் குறிப்பிட்டு அவர்களுக்கு கிடைக்க வேண்டிய
அடிப்படை உரிமைகள் எல்லாவற்றினையும் தடுத்து வருகின்றது. இதனால் ரோஹிங்யர்களின்
விடுதலைக்காக ஆயுதக்குழு ஒன்றும் அங்கு செயற்படத் தொடங்கியது. இந்த ஆயுதக்குழு 2017ஆம்
ஆண்டு ஓகஸ்ட் மாதம் 25ஆம் திகதி நடத்திய தாக்குதலை அடுத்து 10 சிப்பாய்கள் உயிரிழந்தனர்.
இதையடுத்து மியன்மார் அரசானது ரோஹிங்யர்களுக்கு எதிரான வன்முறையை பெருமெடுப்பில்
மேற்கொண்டது. இதனையடுத்து ஏராளமான ரோஹிங்யர்கள் பாதுகாப்புக் காரணங்களுக்காக
அயல்நாடுகள் நோக்கி நகர ஆரம்பித்தனர். இம்மக்களுக்களுக்கெதிராக மியன்மார் அரசு கொலை,
கொள்ளை, பாலியல் வன்புணர்வு, கிராமங்களை அழித்தல், அரச மற்றும் தனியார் வேலைகளை
வழங்காமை, காரணமின்றி சிறையிலடைத்தலென அனைத்து விதமான மனித உரிமை மீறல்களையும்
நடைமுறைப்படுத்தியது. சர்வதேசம் இதனைப் பெரிதளவில் கண்டுகொள்ளவில்லை. ஐ.நா சபை
தற்காலத்தில் இவ்விடயமாக கவனம் செலுத்தியபோதும் அதனால் ரோஹிங்கியர்களுக்கு ஒரு
தீர்வினை முழுமையாகப் பெற்றுக்கொடுக்க முடியவில்லை. முழுக்க முழுக்க வரலாற்று
அணுகுமுறையின் அடிப்படையில் விமர்சன நோக்கில் அமையப்பெற்ற இவ்வாய்வின் மூலமாகப் பல
நோக்கங்கள் நிறைவு செய்யப்படுகின்றன. ரோஹிங்கிய முஸ்லீம்களுக்கெதிராக மியன்மார் அரசு
மேற்கொண்ட இனச்சுத்தீகரிப்பு நடவடிக்கைகளை இனங்காண்பதும், ரோஹிங்கிய முஸ்லீம்கள்
தொடர்பாக சர்வதேச நாடுகளின் நிலைப்பாட்டினை வெளிக்கொணர்வதும், இறுதியாக அவர்களது
தற்கால நிலை எது என்பதனை வெளிப்படுத்துவதனையும் பிரதான நோக்கங்களாக இவ்வாய்வானது
கொண்டுள்ளது. இவ்வாய்வில் முதற்தர மற்றும் இரண்டாந்தர தரவுகள் ஆய்வின் தேவைகருதி
பயன்படுத்தப்பட்டுள்ளன. அரசியல் தலைவர்களால் சமகாலத்தில் வெளியிடப்பட்ட கருத்துக்கள்,
முதற்தர ஆதாரங்களாகவும் பத்திரிகைகள், சஞ்சிகைகள், கட்டுரைகள், இணையத்திலிருந்து
பெறப்பட்ட தரவுகள் என்பன இரண்டாம்தர தரவுகளாகவும் ஆய்வில் பயன்படுத்தப்பட்டுள்ளன.
பொதுப்படப் பார்த்தால் மியன்மார் நாட்டில் பல்லின அரசொன்று அமையுமிடத்திலே தான் அங்கு
ஜனநாயகத்தினை ஓரளவுக்கு எதிர்பார்க்க முடியும்.