Abstract:
இலங்கை முஸ்லிம்களின் கலை இலக்கியப் பாரம்பரியத்தினுள் பக்கீர்களுக்குத் தனித்த இடமுண்டு.
இலங்கையில் பக்கீர்கள் மிக நீண்ட காலமாக 'பக்கீர்பைத்', 'தஹரா இசை', 'றிபாய் றாதிப்' ஆகிய
தமது ஆன்மீகம் சார் நிகழ் கலைகள் வாயிலாக மக்கள் தொடர்பினைப் பேணி வந்துள்ளனர்.
'றாதிப்' என்பது இலங்கை முஸ்லிம்கள் மத்தியில் ஓர் ஆன்மீகக் கருமமாக தொன்று தொட்டு இருந்து
வந்தாலும், பக்கீர்களின் றிபாய் றாதிபே ஒரு கலை நிகழ்வாக மக்களின் மிகுந்த கவனத்தைப்
பெற்றிருக்கின்றது. புத்தளம், காலி, ஹம்பாந்தொட்ட போன்ற சில பிரதேசங்களிலும் இடம்பெற்று
வரும் இந்நிகழ்வு இலங்கையின் தென்கிழக்குப் பிரதேசமான அம்பாறை மாவட்டத்திலேயே அதிகம்
இடம்பெற்று வருகின்றது. கடந்த காலங்களில் தென்கிழக்கு முஸ்லிம்களின் பண்பாட்டு
அடையாளங்கள் தொடர்பில் பக்கீர்களின் றிபாய் றாதிப் தொடர்பாக எத்தகைய காத்திரமான
ஆய்வுகளும் இடம்பெறாத நிலையிலேயே தென்கிழக்கு வாழ் பக்கீர்களை மையப்படுத்தி இவ்வாய்வு
மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஆய்வின் பிரதான நோக்கம் றிபாய் றாதிபின் உட்கூறுகளை ஆராய்ந்து
வெளிக்கொணர்தலாகும். ஆய்வின் முதலாம் நிலைத் தரவுகளாக தென்கிழக்கில் தற்பொழுது
வாழ்ந்து வரும் பக்கீர்களுடனான நேர்காணல்கள் மூலமும், பங்குபற்றல் சார் நேரடிக்கள அவதானம்
மூலமும் பெறப்பட்ட தகவல்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இரண்டாம் நிலைத் தரவுகளாக பக்கீர்கள்
பற்றியும் அவர்களது கலைகள் பற்றியும் நூல்கள் மற்றும் இணையத் தளங்களில் வெளியான
கட்டுரைக் குறிப்புக்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. ஆய்வின் நிறைவில் திக்ர் சலவாத்துக்கள், தஹரா
இசை, ஹாழிர் பைத், பாவலா ஆடல், குத்து வெட்டு ஆகியவற்றை றிபாய் றாதிபின் உட்கூறுகளாக
இனங்காண முடிந்ததோடு, அவை பற்றிய மேலும் நுண்மையான தகவல்களை வெளிக்கொணர
முடிந்தது.