Abstract:
தன் உயிரைத் தானே மாய்த்துக் கொண்டு தன் குடும்பத்தையும் கஷ்டத்தில் சிக்க வைப்பதில்
தற்கொலைக்குப் பிரதான இடம் உண்டு. ஏறாவூர் பொலிஸ் பிரிவில் தற்கொலையின் அண்மைக்காலப்
போக்கையும் அதற்கான காரணங்களையும் கண்டறிதல் இந்த ஆய்வின் நோக்கமாகும். பண்பு
ரீதியான ஆய்வு முறையிலமைந்த இவ்வாய்வு, ஆய்வுப் பிரதேசத்தின் திடீர் மரண விசாரணை
அதிகாரி, பொலிஸ் நிலைய பெண்கள் மற்றும் சிறுவர் பிரிவின் உயர் அதிகாரி, போதைப் பொருள்
தடுப்புப் பிரிவின் உயர் அதிகாரி மற்றும் சமூக நிறுவனங்களின் உத்தியோகத்தர்கள் அடங்கலாக 10
நிறுவனங்களின் முக்கியஸ்தர்களிடம் பெறப்பட்ட நேர்காணலின் பகுப்பாய்வினையும் மேலும் திடீர்
மரண விசாரணை அதிகாரி மற்றும் பொலிஸ் நிலையத்திலிருந்து பெறப்பட்ட ஆவணங்களின்
மீளாய்வினையும் மையப்படுத்தியது. ஏறாவூர் பொலிஸ் பிரிவில் தற்கொலை வீதம் அதிகரித்துக்
காணப்படுகின்றது. தற்கொலை புரிபவர்களில் பெண்களே அதிகமாக உள்ளனர். அதிலும் இளம்
வயதினரே அதிகமாக தற்கொலை செய்து கொள்கின்றனர். முஸ்லிம்களை விட இந்து சமயத்தினரே
கூடுதலாக தற்கொலை முயற்சியில் ஈடுபடுகின்றனர். தனியான அறைகளில் தூக்கிடுவதற்கு சீலை
மற்றும் நைலோன் கயிறும் பயன்படுகின்றது. தற்கொலைக்கான காரணங்களில் முதன்மையானதாக
நுண்கடன் அமைந்துள்ளதோடு, அதற்கு அடுத்த நிலையில் போதைப் பொருள் பாவனை, காதல்,
தொலைக்காட்சிப் பாவனை என்பவைகள் காணப்படுகின்றன. எனவே, தற்கொலையை
இல்லாதொழிப்பதற்கான முன்னெடுப்புக்கள், அதற்கான வழிகாட்டல்கள் பற்றிய முன்மொழிவுகளைத்
தருவதாகவும், எதிர்காலத்தில் இவ்விடயத்தில் ஆய்வை மேற்கொள்வோருக்கு உதவுவதாகவும்
இவ்வாய்வு அமைகிறது.