Abstract:
கலை இலக்கியங்கள் செழித்தோங்கி வளர்ந்த பிரதேசங்களுள் இலங்கையின் தென்கிழக்கில்
அமைந்துள்ள அம்பாறை மாவட்டமும் ஒன்று. இப்பிரதேச முஸ்லிம்களின் பண்பாட்டு அடையாளம்
என்பது எம். ஏ. நுஃமான், மருதூர். ஏ. மஜீத், எஸ். எச். எம். ஜெமீல், எஸ். முத்து மீரான், றமீஸ்
அப்துல்லாஹ் போன்ற பல ஆய்வாளர்களால் நிறுவப்பட்டள்ளது. இருப்பினும்; தமிழ் ஆய்வுப்
பரப்பினுள் தென்கிழக்கு முஸ்லிம்களின் பண்பாட்டில்; தனித்துவம் மிக்கதாய் விளங்கும் பக்கீர்களின்
கலை இலக்கியச் செயற்பாடுகள் தொடர்பில் குறிப்படத்தக்க ஆய்வுகள் இடம்பெறவில்லை என்றே
கூறலாம். இதனடிப்படையில் ஆய்வுப் பயணத்தில் பெறப்பட்ட தகவல்களை அடிப்படையாகக் கொண்டு
பக்கீர்களுடைய கலை இலக்கியச் செயற்பாடுகள் மற்றும் சமயக் கிரியைகள் சார்ந்த அனைத்திற்கும்
அடிநாதமாக விளங்கும் 'பக்கீர் பைத்' பற்றியதாக இவ்வாய்வு அமைந்துள்ளது. இவ்வாய்வின் பிரதான
நோக்கம் 'பக்கீர் பைத்' தென்கிழக்கு முஸ்லிம்களது பண்பாட்டோடு கொண்டுள்ள தொடர்பினை
இனங்காண்பதாகும். இவ்வாய்வில் முதலாம் நிலைத் தரவுகளாக அம்பாறை மாவட்டத்தில்
தற்பொழுது வாழ்ந்து வரும் பக்கீர்களிடமிருந்து நேர்காணல் மூலமாகப் பெறப்பட்ட தகவல்களும்,
பங்குபற்றல் சார் கள அவதானம் மூலம் பெறப்பட்ட தகவல்களும் இரண்டாம் நிலைத் தரவுகளாக
பக்கீர்கள் பற்றியும் அவர்களது கலைகள் பற்றியும் நூல்கள்;களில் வெளியான குறிப்புக்களும்
பயன்படுத்தப்பட்டுள்ளன. ஆய்வின் முடிவாக கடந்த காலங்களில் நன்கொடைகளைப் பெற்றுக்
கொள்ளல், நோன்பு காலங்களில் அதிகாலையில் துயிலெழுப்புதல், திருமண நிகழ்வு, விருத்த சேதன
நிகழ்வு, மார்க்கச் சொற்பொழிவு, வீடுகளில் விஷேட அழைப்பு, றாதிப் நிகழ்வு ஆகிய
சந்தர்ப்பங்களில் பக்கீர் பைத் பாடப்பட்டு வந்துள்ளதையும் சமகால சூழலில் நோன்பு காலங்களில்
அதிகாலையில் துயிலெழுப்புதல், அதிதிகளை வரவேற்றல், றாதிப் நிகழ்வுகள், வீடுகளில் விஷேட
அழைப்பு ஆகிய சந்தர்ப்பங்களில் பக்கீர்பைத் இடம்பெறுவதையும் இனங்காண முடிந்தது. ஒட்டு
மொத்தமாக நோக்குகையில் பக்கீர்பைத் முஸ்லிம்களின் பண்பாட்டில் காத்திரமான வகிபாகத்தை
செலுத்துகின்றது.