Abstract:
இவ்வாய்வானது அம்பாரை மாவட்டத்தில் அமைந்துள்ள சாய்ந்தமருது பிரதேசத்தினை
அடிப்படையாகக் கொண்டது. இப்பிரதேசத்தில் அண்மைக்காலமாக மது மற்றும் புகைப் பாவனை
அதிகரித்து வருகின்றமையை அவதானிக்கக் கூடியதாக உள்ளது. இஸ்லாத்தில் முற்று முழுதாகத்
தடுக்கப்பட்டுள்ள மது மற்றும் புகைத்தலானது இப்பிரதேசத்தில் அதிகரித்து காணப்படுவதற்கான
காரணத்தினை கண்டறிந்து, மது மற்றும் புகைத்தலினால் ஏற்படும் விபரீதங்களை விளக்கி அதனை
முற்றாக ஒழிப்பதற்கான இஸ்லாமிய உளவளத்துணையின் முக்கியத்துவத்தை விளக்குவதே
இவ்வாய்வின் நோக்கமாகக் காணப்படுகின்றது. இதற்குத் தேவையான முதல் நிலைத் தரவுகள் மது
மற்றும் புகைத்தல் பழக்கத்துக்குள்ளான 50 நபர்களை மாதிரியாகக் கொண்டு தகவல்கள்
பெறப்பட்டன. இவர்களிடமிருந்து தகவல்களைப் பெற வினாக்கொத்து முறை பயன்படுத்தப்பட்டது.
இரண்டாம் நிலைத் தரவுகளாக கட்டுரைகள், சஞ்சிகைகள், ஆய்வுக் கட்டுரைகள், புத்தகங்கள்
மற்றும் இணையத்தளமும் பயன்படுத்தப்பட்டது. இதன் கண்டுபிடிப்பாக இப்பிரதேசத்தில் 'போதையற்ற
இஸ்லாமிய இளைஞர் குழுவை உருவாக்கல்' என்ற ஒரு குழுவை நிறுவுவதினூடாகவும், இஸ்லாமிய
வழிகாட்டல்களை மார்க்க வல்லுநர்கள், முஸ்லிம் உளவளத்துணையாளர்கள் ஊடாகவும், மது
மற்றும் புகைப் பாவனைக்குட்பட்டபவர்களுக்கு உளவள மற்றும் மருத்துவச் சிகிச்சை
அளிப்பதினூடாகவும் இப்பழக்கத்தை முற்றுமுழுதாக ஒழிக்க முடியும் என்பதாகக் காணப்படுகிறது.
இவ் இளைஞர் குழுவின் பங்காக மது மற்றும் புகை பற்றிய இஸ்லாமிக கண்ணோக்கை கற்றுக்
கொள்வதும் அதனை மற்றவர்களுக்கு விளங்கப்படுத்துவதும், குழு கலந்துரையாடல்களை
மேற்கொள்ளல், சமய மற்றும் ஒழுக்கம்சார் பயிற்சிகளை வழங்கல், மாணவர்களுக்கும்
பெற்றோர்களுக்கும் விழிப்புணர்வுகளை வழங்கல், செயற்பாடுகள் மூலமாக மற்றவர்களுக்கு
விளங்கப்படுத்தல், விழிப்புணர்வுகளுக்குத் தேவையான உளவள ஆலோசகர்கள் மற்றும் உளநல
நிபுனர்களை பெற்றுக் கொள்ளல் போன்றனவாகக் காணப்படுகின்றன.