Abstract:
"பொருளாதார நெருக்கடியும் முஸ்லிம் பாடசாலை மாணவர்கள் எதிர்நோக்கும் சவால்களும் : தர்கா நகர் பிரதேசத்தை மையப்படுத்திய ஆய்வு' எனும் தலைப்பில் இவ்வாய்வானது மேற்கொள்ளப்பட்டுள்ளது. பொருளாதார நெருக்கடியால் முஸ்லிம் பாடசாலை மாணவர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் தொடர்பாகவும் பாடசாலைக் கல்வியில் ஏற்பட்டுள்ள தாக்கங்கள் தொடர்பாகவும் பரிசீலிக்கப்பட்டுள்ளது. அளவு மற்றும் பண்புசார் கலப்பாய்வுத் தன்மையைக் கொண்டுள்ள இவ்வாய்வானது, முதலாம் நிலைத் தரவுகளையும் இரண்டாம் நிலைத் தரவுகளையும் அடிப்படையாகக் கொண்டுள்ளது. தர்கா நகரில் அமைந்துள்ள மூன்று முஸ்லிம் அரச பாடசாலைகளில் கல்வி கற்கும் தரம் 10 மற்றும் தரம் 11 மாணவர்களில் 150 மாணவர்களிடம் வினாக்கொத்து வழங்கப்பட்டு தரவுகள் சேகரிக்கப்பட்டுள்ளன. மூன்று முஸ்லிம் அரச பாடசாலைகளின் அதிபர்களிடமும் 09 ஆசிரியர்களிடமும் 08 பெற்றோர்களிடமும் நேர்காணல் மூலம் தரவுகள் பெறப்பட்டன. வினாக்கொத்தினூடாகப் பெறப்பட்ட தரவுகள் SPSS மென்பொருள் மூலமாக விபரிப்புப் பகுப்பாய்வு முறை கொண்டும் நேர்காணல் ஊடாக பெறப்பட்ட தரவுகள் குறியீட்டு முறையிலும் பகுப்பாய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. பகுப்பாய்வின் அடிப்படையில் பெறப்பட்ட தரவுகள் பொருளாதார ரீதியாக அவர்கள் எதிர் கொண்ட சவால்களையும் பாடசாலைக் கல்வியில் ஏற்படுத்தியுள்ள தாக்கங்கள் தொடர்பாகவும் மிக துல்லியமாக விபரிக்கப்பட்டுள்ளது. பொருளாதார ரீதியாக முஸ்லிம் பாடசாலை மாணவர்கள் எதிர் கொண்ட சவால்களை உளவியல் ரீதியான சவால்கள், பொருளாதார ரீதியான சவால்கள், சமூக ரீதியான சவால்கள் என கண்டறியப்பட்டுள்ளது. மேலும், இவ்வாய்வானது இனிவரும் காலங்களில் பாடசாலை மாணவர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் தொடர்பாக மேற்கொள்ளக் கூடிய ஆய்வுகளுக்கு துணையாக அமையும் ஓர் ஆவணமாகவும் இதனைக் கொள்ள முடியும்.