Abstract:
ஏதாவது விவகாரம் ஒன்றில், நடுவர் மூலம் பிணக்குகளை தீர்த்தல் மற்றும் வழக்காடும் முறை, பேச்சுவார்த்தை செயற்பாட்டின் மூலம் சமரசம் செய்தல் ஆகிய பல வகையான செயற்பாடுகளில் திருப்தியற்ற நிலையை உணர்ந்த பின் உலக நாடுகள் மத்தியஸ்தம் எனும் செயற்பாட்டினை நோக்கி சார்ந்ததாக மத்தியஸ்தம் தொடர்பான வரலாறுகள் குறிப்பிடுகின்றன.இலங்கையிலும் நீதிமன்றங்களில் தேங்கிக் கிடக்கும் வழக்குகளின் தேக்கத்தின் தாக்கம் மத்தியஸ்தர்களாக சமூகத் தலைவர்களை கொண்ட இணக்கசபைகள் உருவாக வழிவகுத்தது. இஸ்லாத்தை பொருத்தவரை இஸ்லாமும் மத்தியஸ்தத்தை வரவேற்கிறது என்ற வகையில் இஸ்லாமும் அமைதியான முறையில் பரஸ்பர புரிந்துணர்வோடு மத்தியஸ்தம் இடம்பெறவேண்டும் என்பது பற்றிய வழிகாட்டல்களை வழங்கியுள்ளது. அந்த வகையில் இவ்வாய்வானது ஓட்டமாவடி மத்தியஸ்த சபையின் நடைமுறைகளை பரிசீலித்து அதில் தீர்க்கப்பட்ட தனிநபர் முரண்பாடுகளின் இஸ்லாமிய நோக்கை ஆய்வு செய்ய முனைகிறது. இவ்வாய்வு பண்புசார் ஆய்வு (Qualitative) வழிமுறையினை பயன்படுத்தி மேற்கொள்ளப்படவுள்ளது. இவ்வாய்வின் முதலாம் நிலைத் தரவுகளான நேர்காணல் மற்றும் கள அவதானம் என்பவற்றின் ஊடாகப் பெறப்படும் தகவுகள் குறியீட்டு முறையில் பகுப்பாய்வுக்கு உட்படுத்தப்படுவதோடு இரண்டாம் நிலைத் தரவுகளான கல்குடா தொகுதி மற்றும் ஓட்டமாவடி பிரதேச இணக்க சபைகளில் பதிவு செய்யப்பட்ட வழக்குகளுடன் தொடர்பான அறிக்கைகள், தீர்க்கப்பட்ட வழக்குகள் தொடர்பான அறிக்கைகள், இணக்கசபை தொடர்பில் வெளிவந்துள்ள நூல்கள், ஆய்வுக்கட்டுரைகள், இணையதள வெளியீடுகள், பத்திரிகைகள் என்பனவற்றில் இருந்து பெறப்படவுள்ள தகவல்கள் மீளாய்வுக்கு உட்படுத்தப்பட்டு விபரண ரீதியாக முடிவுகள் முன்வைக்கப்படவுள்ளன. இவ்வாய்வு மத்தியஸ்த சபை என்ன நடைமுறைகளை கையாளுகிறது, அவை தொடர்பிலான இஸ்லாமிய வகிபாகம் என்ன என்பதை கண்டறிந்து முறையான திட்டமிடலுடன் எதிர்கால நடவடிக்கைகளை அமைத்துக் கொள்வதற்கான வழிகாட்டல்களை வழங்க உறுதுணையாக அமையல்லது.