Please use this identifier to cite or link to this item: http://ir.lib.seu.ac.lk/handle/123456789/3108
Title: வெடியரசன் கதை: புனைவும் வரலாறும்
Authors: சந்திரசேகரம், சின்னத்தம்பி
Keywords: அடுக்கமைவு
முரண்நிலை
மறு உருவாக்கம்
புனைவு
முக்குவர்
Issue Date: 7-Dec-2017
Publisher: South Eastern University of Sri Lanka, University Park, Oluvil, Sri Lanka.
Citation: 7th International Symposium 2017 on “Multidisciplinary Research for Sustainable Development”. 7th - 8th December, 2017. South Eastern University of Sri Lanka, University Park, Oluvil, Sri Lanka. pp. 288-294.
Abstract: வெடியரசன் கதை யாழ்ப்பாண முக்குவர் மத்தியில் நீண்டகாலமிருந்து வழங்கிவருகின்ற கதையாகும். முக்குவர்கள் வெடியரசனை முக்குவர் குலத் தலைவனாகவும் தம்மை அவனது வழித்தோன்றல்களாகவும் கருதுகிறார்கள். முக்குவர்கள் யாழ்ப்பாணச் சமூக அடுக்கமைவில் இடைநிலையினராக மதிக்கப்பட்டு வந்த சூழலில் தமது வரலாற்றுப் பெருமையினை வெளிப்படுத்தி அதனூடாக தம் சமூக அந்தஸ்தை நிலைநிறுத்த முனைந்தமையின் வெளிப்பாடாகவே வெடியரசன் கதை அமைந்துள்ளது. வெடியரசன் புனைவு யாழ்ப்பாணத்திலே வாய்மொழிக் கதை, கூத்து, கண்ணகி வழக்குரை ஆகிய கலை இலக்கியங்களிலே சிற்சில மாற்றங்களோடு புனையப்பட்டுள்ளபோதும் கண்ணகி வழக்குரையில் இடம்பெறும் கதையே பிரதானமானதாக அமைகின்றது. கண்ணகி வழக்குரையின் கடலோட்டு காதையில் கண்ணகிக்குக் காற்சிலம்பு செய்வதற்காக நாகமணி பெறுவதற்கு வரும் மீகாமனுக்கும் இலங்கை மன்னன் வெடியரசனுக்கும் இடையிலான போரும் நாகமணி பெறுவதும் சித்திரிக்கப்படுகின்றது. இங்கு வெடியரசனதும் அவனது தம்பியரதும் வீரமும் புகழும் பலபடப் புகழ்ந்துரைக்கப்படுவதும் அதற்குப் பெரும் பகுதி ஒதுக்கப்பட்டுள்ளதும் இந்த நூல் முக்குவ சாதிக் குழுமத்தின் வீர வரலாற்றுப் பெருமையை முன்னிறுத்துவதை இலக்காகக் கொண்டிருப்பதைப் புலப்படுத்துகின்றது. அதேவேளை சாதிய முரண்பாடுகளும் இந்தப் புனைவுக்குள் தொக்குநிற்பதாகத் தெரிகின்றது. அதாவது முக்குவர் X பரதவர் முரண்நிலை வெடியரசன் X மீகாமன் முரணாகச் சித்திரிக்கப்பட்டுள்ளதாகத் தெரிகின்றது. இங்கு வெடியரசன் முக்குவகுல முன்னோனாகக் காட்டப்பட மீகாமன் பரதவர் குலத் தலைவனாகவும் அவனது படைகள் பரதவர் படைகளாகவும் காட்டப்படுகின்றது. எனவே இலங்கைத் தமிழரிடையே காணப்படும் ஒரு சமுதாயப் பிரிவினரின் வரலாற்றுச் சிறப்பை மேன்மைப்படுத்திக் காட்டுவதற்கான அரசியலாகவே வெடியரசன் கதையின் உருவாக்கமும் இடம்பெற்றுள்ளது. அத்தோடு கண்ணகி வழிபாட்டை தமது குழுமம் சார்ந்ததாகக் கட்டமைப்பதும் இக்கதையிணைப்பின் அரசியலாக அமைந்துள்ளது. அதேவேளை கண்ணகி வழக்குரையின் பிரதியாக்கங்களாகக் கருதப்படுகின்ற கோவலனார் கதை, சிலம்புகூறல் ஆகியவற்றிலே இடம்பெற்றுள்ள வெடியரசன், மீகாமன் பற்றிய கதையிலே ஏற்பட்டுள்ள மாற்றங்கள் கண்ணகி வழக்குரையை எல்லாக் குழுமங்களுக்குமுரிய பொது வழிபாட்டுப் பாடலாக திட்டமிட்டு மறு உருவாக்கம் செய்ததைக் காட்டுகின்றன. மேலும், கண்ணகி வழக்குரை முதலான இலக்கியங்களில் இடம்பெறுகின்ற வெடியரசன் பற்றிய புனைவானது கண்ணகி வழிபாட்டுடன் நாக வழிபாட்டை இணைக்கின்ற முயற்சியாகவும் உள்ளது. அதேவேளை கோவலனார் கதை, சிலம்புகூறல் ஆகிய இரு படைப்புகளிலும் வரும் கடலோட்டுகாதையின் இறுதியிலே வெடியரசனும் அவனது தம்பி விளங்குதேவனும் போரின் பின் மட்டக்களப்புக்குச் சென்று காடுவெட்டி வயல்கள் உண்டாக்கி, குளங்கள் திருத்தி பயிர்கள் செய்து அரசுசெய்து இருந்ததாகப் பாடப்படுகின்றது. இது யாழ்ப்பாண முக்குவ குழுமத்தினரின் மட்டக்களப்புத் தொடர்பு மற்றும் இடப்பெயர்வைச் சுட்டுவதாகவே உள்ளது. மட்டக்களப்பில் கண்ணகி வழக்குரை கண்ணகி வழிபாட்டிலே முக்கிய கூறாக மாறியுள்ளபோதும் வெடியரசன் கதை இங்கு சாதிய உணர்வுடன் பார்க்கப்படுவதில்லை. ஏனெனில் இங்குள்ள முக்குவர் சமூக அதிகாரத்தில் மேலடுக்கில் இருந்த நிலையில் சாதிய இருப்புப் பற்றிப் பேசவேண்டிய தேவை இருக்கவில்லை. எனவே வெடியரசன் கதை யாழ்ப்பாண முக்குவ சமூகத்தவரின் சமூகத் தேவையின் நிமித்தமே உருவாக்கப்பட்டுள்ளது.
URI: http://ir.lib.seu.ac.lk/handle/123456789/3108
ISBN: 978-955-627-119-5
Appears in Collections:7th International Symposium - 2017

Files in This Item:
File Description SizeFormat 
Inaternational Symposium 2017 - SEUSL (21).pdf237.37 kBAdobe PDFThumbnail
View/Open


Items in DSpace are protected by copyright, with all rights reserved, unless otherwise indicated.